இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி: காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி:  காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 5:44 AM IST (Updated: 27 May 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர், 

தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், குடிசைவாசிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசையும்,அதை தடுத்து நிறுத்தாத தமிழக அரசையும் கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

மாநகர துணைத்தலைவர் கோபால், நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, ராமகிருஷ்ணன்,மோகன்ராஜ், வேலுச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி பங்கேற்றனர். இதுபோல் தபால் நிலையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்வாரிய அலுவலகங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் கார்த்தீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் விவசாய அணியின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஷகிலா பானு, கவுரி, சாகுல் அமீது ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அவினாசி

அவினாசியை அடுத்து தெக்கலூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் வி.சி.மகாலிங்கம் தலைமை தாங்கினார். வட்டாரத்தலைவர் மணி முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவி, சுப்பிரமணியம், நவீன்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெருமாநல்லூர் நால்ரோட்டில் வட்டாரத்தலைவர் கே.கருப்பசாமி தலைமையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Next Story