விஷம் குடித்து கணவர் தற்கொலை: விசாரணைக்காக வந்த பெண் போலீஸ் நிலையம் முன்பு பல மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் கல் பட்டறை நடத்தி வந்தவர் ஜெயக்குமார் (வயது50).
பொறையாறு,
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் கல் பட்டறை நடத்தி வந்தவர் ஜெயக்குமார் (வயது50). இவருக்கும், இவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் ஜெயக்குமாரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் மனைவி ராஜராஜேஸ்வரி (39), மயிலாடுதுறை உதவி கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவரை சொத்து பிரச்சினைக்காக அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவர்களுக்கு உடந்தையாக இருந்துகொண்டு போலீசார் தன்னை மிரட்டி சொத்துக்களை எழுதிகொடுக்க வேண்டும் என வற்புறுத்துவதாக கூறி இருந்தார். மேலும் தனது சாவுக்கு யார் காரணம்? என்பது குறித்து ஜெயக்குமார் எழுதி உள்ள டைரி தன்னிடம் இருப்பதாகவும் ராஜராஜேஸ்வரி புகாரில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் செம்பனார்கோவில் போலீசார் ராஜராஜேஸ்வரியை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் சென்றார்.
ஆனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. இரவு 8 மணி வரை அவர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தும், விசாரணை நடத்தப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story