காசி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் குமரியில் 36 இடங்களில் நடந்தது


காசி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் குமரியில் 36 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 27 May 2020 6:55 AM IST (Updated: 27 May 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் காசி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குமரி மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில், 

குமரியில் காசி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குமரி மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காசி மீதான வழக்கு

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (வயது 26). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பேசிப்பழகி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, நகை, பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், மாதர் சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் காசி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும், அவருடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், அண்ணாத்துரை, தங்கமோகன், உஷா, கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அந்தோணி, மிக்கேல், ராஜ்குமார், லியோ, நகர செயலாளர் மோகன், அருணாசலம், கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

45 பேர் கைது

அனுமதியின்றி 5 பேருக்கு மேல் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரையும் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், கொரோனா தொற்றுநோய் பரவும் விதத்தில் கூடி நின்றதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

36 இடங்கள்

இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் சமூக இடைவெளியை கடைபிடித்து தலா 5 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தக்கலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு நிர்வாகி சந்திரகலா தலைமை தாங்கினார். தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் போராட்டத்தை விளக்கி பேசினார். வட்டார குழு உறுப்பினர் வேலப்பன் நிறைவுரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அரங்கசாமி, ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story