கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; காங்கிரஸ் கட்சியினர் கைது


கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; காங்கிரஸ் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 27 May 2020 7:24 AM IST (Updated: 27 May 2020 7:24 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிடக் கோரியும், மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை புதூர் மின் வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் காமராஜ், செய்யதுபாபு, பிஸ்மில்லா கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊமச்சிகுளம் இந்தியன் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கார்த்தியாயினி பிரசன்னா, மாவட்ட அமைப்பாளர் வக்கீல் அசோக், ஐ.என்.டி.யூ.சி ராஜாராம் சிங், ஆலத்தூர் கிராம கமிட்டி தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் நூர் முகமது தலைமையில் கருப்பாயூரணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சிவானந்தம் உள்பட பலர் கைதாகினர். ஒத்தக்கடையில் வட்டார தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், அங்குள்ள உதவி மின் வாரிய அலுவலகம் முன்பாகவும் வட்டார தலைவர் சுப்பாராயலு தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனித உரிமை பிரிவு நிர்வாகி ஜெயமணி, மலைக்கணி, ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

விநாயக ராஜா, முரளி, மலைராஜன், பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். பாலமேட்டில் உள்ள அரசு வங்கி முன்பு நகர் தலைவர் வைரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் காந்தி, செயலாளர் ராஜேந்திரன், நகர் துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு உசிலம்பட்டி நகர் காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன், மாவட்ட செயலாளர் நர்ஸ் தங்கமணி, முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர் வெஸ்டன் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் எழுமலையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு நகர் காங்கிரஸ் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் வாசிமலை, அவைத் தலைவர் லட்சுமணன் உள்பட 5 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரையும் எழுமலை போலீசார் கைது செய்தனர். மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் மகாதேவன், வட்டார தலைவர்கள் பொன் கார்த்திக், சிங்காரவேலு, மாநில விவசாய அணி துணைத் தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி தபால் அலுவலகம் முன்பு நகர தலைவர் முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் குருசாமி, வழக்கறிஞர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் குருநாதன், முத்து, வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சோழவந்தான் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவி செல்லப்பா, எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் கண்ணுடையாள், புறம் மூர்த்தி, வட்டார தலைவர் பழனி, சங்கரபாண்டி, மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டு கைதாகினர்.

Next Story