மீனாட்சி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரண போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நேற்று இந்து முன்னணியினர் தோப்புக்கரண போராட்டம் நடத்தினர்.
மதுரை,
கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளது. இதில் சில தளர்வுகளை அரசு அறிவித்து கடைகள், தொழிற்சாலைகளை திறக்க உத்தரவிட்டது. மேலும் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மதுரையில் 11 இடங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் முன்பும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
இதற்காக ஜான்சிராணி பூங்கா அருகில் இருந்து மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக தெற்குகோபுரம் பகுதிக்கு நடந்து வந்தனர். அவர்களை கோவில் அருகே செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. அதனையும் மீறி அவர்கள் கோவில் நோக்கி சென்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் தெற்குகோபுரம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த இடத்தை மீறிச் சென்றால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து இந்து முன்னணியினர் தெற்கு கோபுரம் முன்பு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினார்கள். பக்தர்கள் வழிபாடு செய்ய தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முக்தீஸ்வரர் கோவில்
இதே கோரிக்கையை வலியுறுத்தி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் தோப்புக்கரண போராட்டம் நடந்தது. மேலும் மதுரையில் ஜெய்ஹிந்த்புரம், வண்டியூர், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story