ஊரடங்கால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை: முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி


ஊரடங்கால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை: முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 27 May 2020 8:16 AM IST (Updated: 27 May 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

திசையன்விளை, 

ஊரடங்கால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

முருங்கைக்காய்

நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில் முருங்கை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், முருங்கைக்காய்கள் மாவட்ட அளவில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு மட்டும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஊரடங்குக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் முருங்கைக்காய்கள் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது பஸ்கள் ஓடாததால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை.

விலை வீழ்ச்சி

மேலும், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எளிய முறையில் நடப்பதாலும், கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாலும், ஏற்றுமதி தடைப்பட்டு இருப்பதாலும் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறியதாவது:-

நடவடிக்கை

கடந்த ஆண்டு மே மாதம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தற்போது ரூ.4 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் பறிப்பதற்கு ஆகும் செலவு மற்றும் அவற்றை வாகனத்தில் ஏற்றுவது, இறக்குவது ஆகியவற்றுக்கு ஆகும் கூலி, உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றுக்கு ஆகும் செலவை ஒப்பிடும்போது, முருங்கைக்காய் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, அரசு விவசாயிகளின் நலன் கருதி, கட்டுப்பாடுகளுடன் முருங்கைக்காய்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முருகேசன் கூறினார்.

Next Story