மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் லலித் ஆண்டனி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லகுமார் எம்.பி. கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்ட துணை தலைவர் பி.சி.சேகர் தலைமையிலும், உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நகர தலைவர் வின்சென்ட் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். அப்சல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜேசு துரைராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் குட்டி என்கிற விஜயராஜ், அம்மாசி, அஜிஸ்வுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல ஸ்டேட் வங்கி முன்பு மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆண்டு காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ள இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை தடை இன்றி வழங்க வேண்டும்.
மின்சாரத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி மற்றும் காங்கிரஸ் கொடி ஏந்தி கலந்து கொண்டனர். இதே போல் பர்கூர், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி பேங்க் ஆப் பரோடா கிளை முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாச்சிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவரும், காங்கிரஸ் ஒன்றிய தலைவருமான இந்திரா நாகராஜ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முனிராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் பைரேசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் வாசு, ஊராட்சி மன்ற துணை தலைவர் காயத்திரி பாய் மஞ்சுநாத், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிலம்பரசன் மற்றும் ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதே போல நாச்சிகுப்பத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 30 ஆண்டு காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும். மின்சாரத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோன்று தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி 4 ரோடு அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் நகர தலைவர் செந்தில்குமார், கட்சி நிர்வாகிகள் வினோத், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story