7 பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஆசிரியர்களுக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு
விருதுநகர் மாவட்டத்தில் 7 பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில் ஆசிரியர்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இன்று தொடங்குகிறது. இதற்காக அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்தி வித்யாலயா பள்ளி, சிவானந்தா மெட்ரிக் பள்ளி, சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் அறையில் 8 ஆசிரியர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் பள்ளி வளாகங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை படுத்தப்பட்டு உள்ளது.
பஸ் வசதி
விடைத்தாள் திருத்தும் பணியில் 1,366 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மதுரை, கோவில்பட்டி, சாத்தூர், காரியாபட்டி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 11 இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் இவர்கள் பயணிக்க தேவையான பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story