சாமானியருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் மின்சார சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விட கூடாது மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
நாடு முழுவதும் சாமானியருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் மின்சார சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விட கூடாது என காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகர்,
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முடிவின்படி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரசார் ஊரடங்கு விதிமுறைகளை அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர். விருதுநகர் ரெயில் நிலைய தபால் அலுவலகம் முன்பு எனது தலைமையில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர் காங்கிரஸ் தலைவர் வெயிலுமுத்து உள்ளிட்ட 5 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மின்சார சட்டம்
மத்திய அரசு மின்சார சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இச்சட்டத்தின் முக்கிய அம்சமாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மட்டும் இன்றி சாமானியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தான் மாநில அரசுகளுக்கு கடன் வழங்க முடியும் என மத்திய அரசு கூறுகிறது.
பாதிப்பு
டெல்லியில் மின் வினியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ரூ.1000 மின் கட்டணம் செலுத்தியவர்கள் ரூ.6 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் மின்சார சட்டம் அமலுக்கு வந்தால் இதே நிலை தான் நாடு முழுவதும் ஏற்படும். ஏழை, எளிய மக்களும் சாமானியர்களும் பல மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story