பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடக்கம் கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் திருத்தும் மையமாகவும்,செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் மையமாகவும், பரமக்குடியில் கே.ஜெ.இ.எம். மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் திருத்தும் மையமாகவும், ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி கூடுதல் மையமாகவும் என 4 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 928 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 99,528 விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒவ்வொரு அறைகளில் உள்ள மேஜைகள் உள்பட அனைத்து தளவாட பொருட்கள், மைய வளாகம் முழுமைக்கும் காலை, மாலை என இருமுறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் ஒரு முதன்மை மதிப்பீட்டாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவி மதிப்பீட்டாளர்கள் என 8 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பரிசோதனை
ஆசிரியர்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்றி அமர குறைந்தபட்சம் 1.5 மீட்டர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்படும். விடைத்தாள் திருத்தும் மைய வளாகத்தில் ஆசிரியர் தங்களது கைகளை சுத்தமாக கழுவி பராமரிக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதியுடன் சோப்பு, கிருமி நாசினி இருப்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மற்றும் உள்மாவட்டங்களில் இருந்து வருகை தந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 12 வழித்தடங்களில் சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை மேற்கொள்ள 4 மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் அஜித்பிரபுகுமார், இந்திரா, மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, கருணாநிதி, பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், நகராட்சி ஆணையாளர்கள் விஸ்வநாதன், வீரமுத்துக்குமார், பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story