ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் ஜூன் 15-ந் தேதி முதல் கடலுக்கு செல்ல முடிவு ஊரடங்கினால் படகுகளை தயார் செய்வதில் தாமதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் ஜூன் 15-ந் தேதி முதல் கடலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளன. ஊரடங்கினால் படகுகளை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியில் இருந்தே மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் விசைப்படகு மீனவர்களுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலமும் தொடங்கியது.
இதன்காரணமாக கடந்த 69 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதி வரை உள்ளது. தடைக்காலம் முடிவடைய இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விசைப்படகுகளுக்கான தடைக்காலத்தை 47 நாட்களாக குறைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதி அளித்து மத்திய, மாநில அரசுகள் ஆணை பிறப்பித்துள்ளன. இந்தநிலையில் ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டம் செயற்குழு உறுப்பினர் மகத்துவம் தலைமையில் நடைபெற்றது. சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு முன்கூட்டியே விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டது. தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மற்றும் 2 மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்கிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களும் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகுகளை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் மீன் பிடிக்க செல்ல அனுமதி வழங்கிய மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆண்டு படகுகளை கரையில் ஏற்றி மராமத்து செய்யும் பணிகள் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதனால் படகுகளை இறக்கவே தாமதம் ஏற்படும். ஊரடங்கால் படகுகளுக்கு தேவையான உபகரணங்கள் ஏதும் முழுமையாக கிடைக்கவில்லை. மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன் உள்ளிட்ட பல வகை மீன்களை விலைக்கு வாங்கி ஏற்றுமதி செய்யும் கம்பெனியினரும் மீன்களை வாங்க தயார் நிலையில் இல்லை.
ஜூன் 15-ந் தேதி
இதனால் அனைத்து பகுதி மீனவர்களும் ஜூன் 1-ந் தேதிக்கு பதில் ஜூன் 15-ந் தேதி முதலே மீன் பிடிக்க செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர். எனவே ஜூன் 15-ந் தேதி முதலே அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறாவளியால் சேதமான படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story