ஊரடங்கால் மூடப்பட்ட மணல் மாட்டு வண்டி குவாரி மீண்டும் திறப்பு
திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட மணல் மாட்டு வண்டி குவாரி மீண்டும் திறக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட மணல் மாட்டு வண்டி குவாரி மீண்டும் திறக்கப்பட்டது.
மணல் குவாரி மூடல்
திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் மணல் மாட்டு வண்டி குவாரி (ரீச்) மூடப்பட்டது. இதனால் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மாடுகளுக்கு தீவனம் கூட வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மீண்டும் செயல்பட தொடங்கியது
இதையடுத்து திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மணல் மாட்டு வண்டி குவாரியை திறக்கக்கோரி சமீபத்தில் மனு கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள கீழமுள்ளிக்குடியில் மணல் குவாரியை திறக்க கலெக்டர் நேற்று அனுமதி அளித்தார். அதன்பேரில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்த மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று முதல் அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி மாட்டு வண்டிகளில் மணலை அள்ளிச்சென்றனர்.
மாட்டு வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் காவிரி ஆற்றின் திருவளர்ச்சோலை பகுதியில் இருந்து வெளியே வந்தன. மீண்டும் மணல் குவாரி திறக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
மீண்டும் வேலை இழக்கும் அபாயம்
இது குறித்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர் கூறியதாவது:-
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதே வேளையில் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் தற்போது திறந்துள்ள குவாரி மீண்டும் மூடப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மீண்டும் வேலை இழக்கும் நிலை உள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டபடி, கொள்ளிடம் ஆற்றில் மாதவபெருமாள்கோவில், கூகூர், தாளக்குடி ஆகிய இடங்களில் மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story