விவசாய மின் இணைப்புக்கு, கூடுதல் மின்பளு பெற புதிய திட்டம் அறிமுகம் அதிகாரி தகவல்


விவசாய மின் இணைப்புக்கு, கூடுதல் மின்பளு பெற புதிய திட்டம் அறிமுகம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 May 2020 10:18 AM IST (Updated: 27 May 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே உபயோகத்தில் உள்ள விவசாய இணைப்புகளுக்கு தட்கல் முறையில் கூடுதல் மின்பளு பெறும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர்,

கூடுதல் மின்பளு வேண்டுவோர் தங்களது விருப்ப கடிதத்தை அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மின்வாரிய செயற்பொறியாளரிடம் அளிக்க வேண்டும். விருப்ப கடிதத்துடன், விவசாய மின் இணைப்பு எண், அனுமதிக்கப்பட்ட மின் பளு, தேவைப்படும் கூடுதல் மின்பளு மற்றும் பெயர் மாற்றம் தேவையா என்கிற விவரங்களுடன் கூடுதல் மின் பளுவிற்கான ஒருமுறை செலுத்தும் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்துவதற்கான ஒப்புதல் கடிதத்தை, வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மின்நுகர்வோர் மின் இணைப்பு அமைந்துள்ள மின்மாற்றியில் விண்ணப்பதாரர் கோரும் கூடுதல் மின்பளு அளிக்க கோரிய திறன் இருக்கும் பட்சத்தில் மட்டும் செயற்பொறியாளரிடமிருந்து ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு கடிதம் பதிவு தபால் மூலம் அனுப்பப்படும்.

இதன் பின்னர் புதிய விவசாய விண்ணப்ப பதிவு மற்றும் செயல்பாட்டு கட்டணம் ஆகியவற்றை செலுத்திட வேண்டும். மேலும் பெயர் மாற்றம் தேவைப்படும் மின் நுகர்வோர் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை அளித்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story