அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி   சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 10:32 AM IST (Updated: 27 May 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல், 

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர்களின் அடையாள அட்டை, ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவை பெறப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நிவாரணத்தொகை பலருக்கு கிடைக்கவில்லை என்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் அனைவருக்கும்  நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் செயலாளர் கே.ஆர்.கணேசன் மற்றும் நிர்வாகிகள், தென்னைமர தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து நலவாரிய அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 60 வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த தொழிலாளர்களை உடனடியாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

Next Story