சம்பத்நகர்-பெரியார் நகரில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது


சம்பத்நகர்-பெரியார் நகரில் உழவர் சந்தை இயங்க தொடங்கியது
x
தினத்தந்தி 27 May 2020 12:18 PM IST (Updated: 27 May 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சம்பத்நகர்-பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தை மீண்டும் இயங்கத்தொடங்கியது. இங்கு விவசாயிகள் வந்து செல்ல பஸ்கள் இயக்கப்படுமா? என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

ஈரோடு,

ஈரோடு சம்பத்நகர் மற்றும் பெரியார்நகர் பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. சம்பத்நகர் உழவர் சந்தைக்கு தினசரி சுமார் 150 விவசாயிகளும், பெரியார் நகர் உழவர் சந்தைக்கு தினசரி சுமார் 30 விவசாயிகளும் தங்கள் தோட்டத்து விளைபொருட்களை நேரில் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த உழவர் சந்தைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன. தற்காலிகமாக ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது. எனவே விவசாயிகளின் பொருட்கள் விற்பனையாகாத நிலை ஏற்பட்டது. இதனால் 50 முதல் 60 விவசாயிகள் மட்டுமே சந்தைக்கு வரத்தொடங்கினார்கள்.

எனவே மீண்டும் சம்பத்நகர், பெரியார் நகர் பகுதிகளில் சந்தை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று பழைய இடங்களிலேயே உழவர் சந்தைகள் செயல்பட தொடங்கின.

பொதுமக்களும் ஆர்வமாக வந்து இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்சிக்சென்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “உழவர் சந்தைகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் விவசாயிகள் வசதிக்காக அதிகாலை நேரத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்படும்.

இந்த பஸ்களில் பெரும்பாலும் விவசாயிகள் மட்டுமே வருவோம். இப்போது பஸ்கள் இல்லாததால் தினசரி சந்தைக்கு வர முடியவில்லை. 2 சக்கர வாகனங்களில் அதிகாலை நேரத்தில் பொருட்களை வைத்துக்கொண்டு வருவது பாதுகாப்பு இல்லாதது. எனவே உழவர் சந்தை விவசாயிகள் வந்து செல்வதற்கு வழக்கமான நேரத்தில் குறிப்பிட்ட பஸ்களை மட்டுமாவது இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

Next Story