ரூ.4 லட்சம் குட்கா பொருட்கள் சத்தி சோதனை சாவடியில் சிக்கியது ; டிரைவர் கைது


ரூ.4 லட்சம் குட்கா பொருட்கள் சத்தி சோதனை சாவடியில் சிக்கியது ; டிரைவர் கைது
x
தினத்தந்தி 27 May 2020 12:27 PM IST (Updated: 27 May 2020 12:27 PM IST)
t-max-icont-min-icon

மைசூரில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் சத்தி சோதனை சாவடியில் சிக்கியது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் காவல்துறை சோதனை சாவடி உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்வார்கள். இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிய ஒரு வேன் வந்தது.

போலீசார் அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்போது காய்கறிகளுக்குள் 16 பெட்டிகள், 15 மூட்டைகள் இருந்தன.

அந்த பெட்டிகளையும், மூட்டைகளையும் போலீ சார் பிரித்து பார்த்தார்கள். அப்போது அவைகளுக்குள் பான்பராக், ஹான்ஸ் என தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தன. இதனால் டிரைவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் செல்வம் என்பதும், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றதும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து சோதனை சாவடி போலீசார், சத்தியமங்கலம் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் குட்காவை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தார்.

Next Story