மணப்பாடு கடற்கரை வெறிச்சோடியது: ஊரடங்கால் மாயமான சுற்றுலா பயணிகள் குதூகலம்


மணப்பாடு கடற்கரை வெறிச்சோடியது: ஊரடங்கால் மாயமான சுற்றுலா பயணிகள் குதூகலம்
x
தினத்தந்தி 28 May 2020 3:45 AM IST (Updated: 27 May 2020 10:22 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக மணப்பாடு கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு சுற்றுலா பயணிகளின் குதூகலம் மாயமாகி போய் விட்டது.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரையும் ஒன்றாகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அதிலும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து குதூகலம் அடைவார்கள்.

சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடற்கரையில் அமர்ந்து இதமான காற்று தங்களை வருடி செல்வதில் மனம் மகிழ்வார்கள். மேலும் கடலில் குளித்தும் ஆனந்தம் அடைவார்கள். இதுதவிர தள்ளுவண்டி கடைகளில் தின்பண்டங்களை வாங்கி ருசிப்பார்கள்.

வெறிச்சோடியது

கடற்கரையையொட்டி, இயற்கையாக உயரமான மணல் குன்று ஒன்று அமைந்து உள்ளது. அதன் மீது ஏறி இறங்கியும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் மணல் குன்றின் மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் வழிபடுவது, அதன் பின்புறம் உள்ள உயரமான கலங்கரை விளக்கு மற்றும் கடல் கண்காணிப்பு கேமரா கோபுரம், புனித சவேரியார் வாழ்ந்த குகை, நாழி கிணறு, தியான மண்டபம் ஆகியவற்றை கண்டுகளிப்பது, கடல் அலைகள் முத்தமிடும் கிணற்றில் உள்ள சுவையான குடிநீரை பருகுவது என்று எண்ணற்ற சுகானுபவம் தரும் இடங்களும் இங்கு உண்டு.

ஆனால், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால், சுற்றுலா பயணிகளின் கோடை விடுமுறை குதூகலம் எல்லாம் மாயமாகி போய் விட்டது. மணப்பாடு கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் ஆவல்

அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா விரைவில் ஒழிந்து மணப்பாடு கடற்கரை மீண்டும் களை கட்ட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Next Story