கடையத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கடையத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 May 2020 4:00 AM IST (Updated: 28 May 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடையம்,

கீழக்கடையம் பஞ்சாயத்து கல்யாணிபுரத்தில் ஆதி திராவிட நலத்துறை மூலம் நலிந்தவர்களுக்கு இலவச பட்டா வீட்டுமனை பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு பல வீடுகளை அரசே கட்டி கொடுத்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீடு சம்பந்தமாக பத்திர அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்றபோது, தனது பெயரில் உள்ள சொத்து மற்றொரு பெயரில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பெண் தன்னுடன் வீட்டுமனை பெற்றவர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு விசாரணை செய்ததில் பலரும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தங்களது நிலங்களை போலி சான்றிதழ்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கடையம் போலீசில் புகார் செய்தனர். மேலும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டு முறையிட்டனர்.

தெற்கு கடையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அனுமதி இல்லாமல் ஊரடங்கு நேரத்தில் திரண்டதாக 11 பெண்கள் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Next Story