நீர்வழி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவு


நீர்வழி புறம்போக்கில் உள்ள  ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்  கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவு
x
தினத்தந்தி 28 May 2020 3:07 AM IST (Updated: 28 May 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நீர்வழி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். வெள்ளம் தொடர்பாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தாசில்தார்கள், ஆர்.டி.ஓ.க்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொலைபேசி, வாகனம், வயர்லெஸ் கருவிகள் அனைத்தையும் இயங்கக்கூடிய வகையில் தயாராக வைத்திருக்க வேண்டும். பேரிடர் விவரங்களை 1077 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்நிலை ஆதாரங்களில் நீர்மட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நீர்வழி புறம்போக்கில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் நபர்களை தங்கவைப்பதற்கு வசதியாக திருமண மண்டபங்கள், பள்ளிகளை பாதுகாப்பு மையங்களாக தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதுகாப்பு மையங்களை அதிக அளவில் அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும்.

கோட்ட அளவில் பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். மனித இறப்பு, கால்நடை இறப்பு, சேதம் உள்ளிட்டவற்றை அந்தந்த தாசில்தார்கள் தெரிவிக்க வேண்டும். உடுமலை ஆர்.டி.ஓ., அமராவதி அணையில் உள்ள படகுகள் மற்றும் நீர்மிதவைகளின் எண்ணிக்கை, அவற்றை இயக்குபவர்களின் செல்போன் எண்களை சேகரித்து அறிக்கை வழங்க வேண்டும்.

குடிமராமத்து பணி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு உடற்கவசம், முககவசம் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம். நீர்ப்பாசன கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை முகமை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, ஊரக உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, பொதுசுகாதாரம், வனத்துறை, உணவு பொருட்கள் வழங்கல் துறை, அரசு போக்குவரத்து கழகம், காவல்துறை, தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பி.எஸ்.என்.எல். துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குடிமராமத்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், ஆர்.டி.ஓ.க்கள் கவிதா(திருப்பூர்), ரவிக்குமார்(உடுமலை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story