உடுமலை பகுதியில் சண்டை சேவல் வளர்க்கும் விவசாயிகள் சேவல் கட்டு தடையை விலக்க கோரிக்கை


உடுமலை பகுதியில்  சண்டை சேவல் வளர்க்கும் விவசாயிகள்  சேவல் கட்டு தடையை விலக்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2020 3:45 AM IST (Updated: 28 May 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் சண்டை சேவல் வளர்க்கும் விவசாயிகள், சேவல் கட்டுக்கான தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி, 

ஜல்லிக்கட்டு தமிழர் வீரத்தின் அடையாளமாக போற்றப்படுகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டைக்குத்தடை நீடிக்கிறது. ஆனாலும் உடுமலை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் கம்பீரமான சண்டைசேவல்களை பலரும் கவுரவ சின்னமாக கருதி வளர்த்துவருகின்றனர்.

இது குறித்து சேவல் வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்கள் கூறியதாவது:-

தடை

ஒரு சில பகுதிகளில் சேவல்களின் மீது பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டம், சேவல்களின் கால்களில் கத்தி கட்டி சண்டையிட வைக்கும் செயல் போன்றவற்றால் சேவல் கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கட்டுச்சேவல் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டங்களில் சண்டை சேவல்களை வளர்த்து வருகின்றனர். சிறகுகளின் நிறத்தைக்கொண்டும் கம்பீரமான தோற்றத்தைக்கொண்டும் சேவல்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பொதுவாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வல்லூறு, ஆந்தை, காகம், கிளி, மயில் ஆகிய 5 பறவைகளின் பெயரிலேயே சேவல்கள் அழைக்கப்படுகிறது. இதுதவிர கீரி,பேடு, சித்திரப்புள்ளி என்ற பெயர்களிலும் சேவல்கள் அழைக்கப்படுகிறது. 7 முதல் 15 மாதங்கள் வரையான காலகட்டம் சேவல்களின் வாலிப பருவமாகும். இந்த பருவத்தில்தான் சேவல்களின் சண்டைத்திறம் தீர்மானிக்கப்படுகிறது.

பயிற்சி

இந்த பருவத்தில் சண்டைக்கு உகந்ததாகக் கருதப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் சேவல்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. முகைச்சல், நீச்சல், உயரம் தாண்டுதல், பறத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் நீச்சல் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நீச்சல் பயிற்சியின் மூலம் தான் சேவல்களின் நெஞ்சு விரியும், கால்கள் வலுவடைந்து முன் பின்னாக வேகமாக வாங்கும் திறன் மேம்படும், மூச்சை அடக்கி ஆக்ரோஷமாகப்பாயும் திறன் அதிகரிக்கும்.

தற்போது பி.ஏ.பி. வாய்க்கால்களில் தண்ணீர் வருவதால் அங்கே நீச்சல் பயிற்சி வழங்குகிறோம். இது தவிர வேறு சில உடற்பயிற்சிகளையும் வழங்குகிறோம். சேவல் சண்டைப் போட்டிகளுக்குத் தடை இருந்தாலும் தோட்டத்திலேயே சேவல்களை மோதவிட்டுப் பயிற்சி அளிக்கிறோம். கம்பீரமான சண்டைசேவல்களை வளர்ப்பதை கவுரவ அடையாளமாகவே கருதுகிறோம்.

பொங்கல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய திருவிழா சமயங்களிலாவது சேவல் சண்டையை போதிய பாதுகாப்புடன் நடத்த அரசு அனுமதிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story