கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஞானமாணிக்கம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சாமி.நடராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிபந்தனையின்றி புதிய கடன் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாய விளை பொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாய பணி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். கொரோனா நிவாரண பணிக்கு தமிழகஅரசு கோரிய நிதியை மத்தியஅரசு உடனடியாக வழங்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.7,500 வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து ஆறு, ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவிலூர்
இதேபோல் புலவர்நத்தத்தை அடுத்துள்ள கோவிலூர் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கருப்பையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி, பூதலூர்
திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முகமது சுல்தான், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story