தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த 15 பேரின் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை


தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த 15 பேரின் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 27 May 2020 11:16 PM GMT (Updated: 27 May 2020 11:16 PM GMT)

தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த 15 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை, குண்டுக்கள்துறை, தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் பவானி ஆற்றில் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடுகின்றனர்.

அப்போது ஒரு சில நேரங்களில் உள்ளூர் அணையில் மின்சார உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படும் போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இதனால் குளித்துக் கொண்டு இருப்பவர்கள் நடு ஆற்றில் சிக்கி தவிப்பதும், பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பரிசல் மூலம் மீட்கும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்ய உத்தரவு

இதனை கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின்பேரில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை பவானி ஆற்றுப்பகுதிகளில் திடீர் ஆய்வு பணியை மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் அந்த பகுதிகளில் பவானி ஆற்றில் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் தடையை மீறி பவானி ஆற்றில் குளிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திலக் மற்றும் போலீசார் நெல்லித்துறை விளாமரத்தூர் ஆகிய பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பவானி ஆற்றில் தடையை மீறி குளித்து கொண்டிருந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 15 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. பிடிபட்ட 15 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பவானி ஆற்றின் கரையோர பகுதியில் தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story