எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் காடுவெட்டி குருவின் தங்கை பேட்டி
“எங்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என காடுவெட்டி குருவின் தங்கை செந்தாமரை கூறினார்.
தஞ்சாவூர்,
“எங்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என காடுவெட்டி குருவின் தங்கை செந்தாமரை கூறினார்.
காடுவெட்டி குருவின் தங்கை
முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை சிலர் காடுவெட்டி கிராமத்தில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்ப்பதற்காக வந்த காடுவெட்டி குருவின் தங்கை செந்தாமரை, தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணனுடைய(காடுவெட்டு குரு) நினைவு தினம், பிறந்த தினம் எதையும் நடத்தக்கூடாது என 144 தடை உத்தரவை எப்போதும் போட்டு விடுவார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி எதையும் நடத்தக்கூடாது என எழுதி கையெழுத்து வாங்கி விடுவார்கள். இப்படித்தான் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
மரியாதை
இந்த ஆண்டும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தனர். அண்ணன் மகனும், வீட்டில் உள்ளவர்களும் சென்று கொரோனா இருப்பதால் எதுவும் நடத்தவில்லை. நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். மீறி யாராவது வந்தால் எங்களுக்கு தெரியாது என கூறிவிட்டு வந்து விட்டார்கள்.
அண்ணன் சமாதிக்கு யாரையும் விடவில்லை. அண்ணன் மகனும் வீட்டிலேயே இருந்து விட்டான். மாலையில் சென்று மரியாதை செலுத்தி விட்டு வீட்டிற்கு வந்து விட்டான். மறுநாள் அவன் தோட்டத்திற்கு சென்றான். மாங்கொல்லைக்கு சென்றவனை வெளியே வர முடியாத அளவுக்கு காரை நிறுத்தி பாதையை அடைத்து விட்டனர். வெளியே வர முடியாததால் அங்கிருந்து போலீஸ் சூப்பிரண்டிற்கு போன் செய்து இருக்கிறான். அவரும் பிரச்சினை எதுவும் செய்யாமல் வேறு வழியில் சென்று விடும்படி கூறியிருக்கிறார். அதன்படி அவனும் வீட்டிற்கு வந்து விட்டான்.
திட்டம்
அதற்கு பிறகு இந்த வாரத்தில் அண்ணன் குடும்பத்தை கொலை செய்ய வேண்டும் என ஒரு வீட்டில் திட்டமிட்டுள்ளனர். நானும் சந்தேகப்பட்டு காடுவெட்டி கிராமத்தில் இருக்க வேண்டாம். வேறு இடத்திற்கு வந்து விடுங்கள். பிரச்சினை வேண்டாம் என அண்ணன் குடும்பத்தினரிடம் கூறினேன்.
இதனால் எனது அத்தை மகனுடைய வீட்டிற்கு சென்ற என் அண்ணன் மகன், காடுவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்தான். அவனுடன் வந்த 2 பேருடன் சிலர் பிரச்சினை செய்து அடித்து விட்டனர். இவர்களிடம் எந்த ஆயுதமும் கிடையாது. ஆனால் போலீசாரிடம் இவர்கள் ஆயுதங்களுடன் வந்ததாக கூறியிருக்கின்றனர்.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
என் அண்ணன் இறந்த பிறகு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடையக்கூடாது என விவசாயம் செய்ய விடாமல் சிலர் தடுத்தனர். இப்போது கொலைவெறி தாக்குதலை ஆரம்பித்து இருக்கின்றனர்.
எங்கள் குடும்பம் இருந்தாலே இடைஞ்சல் என நினைத்து ஒவ்வொருவர் மீதும் வழக்கு போட வேண்டும். இல்லையென்றால் அடித்து கொலை செய்ய வேண்டும் என செயல்படுகின்றனர். எங்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என நினைத்தால் ஒரு பாட்டில் விஷத்தை கொடுத்து கொன்றுவிட சொல்லுங்கள். தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story