ஊரடங்கால் எளிமையாக நடக்கும் சுப நிகழ்ச்சிகள்: திருமண அழைப்பிதழ் அச்சிடும் தொழிலாளர்கள் பாதிப்பு


ஊரடங்கால் எளிமையாக நடக்கும் சுப நிகழ்ச்சிகள்:  திருமண அழைப்பிதழ் அச்சிடும் தொழிலாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 28 May 2020 5:13 AM IST (Updated: 28 May 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் எளிமையாக நடந்து வருகின்றன. இதனால் திருமண அழைப்பிதழ் அச்சிடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை,

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள், திருமண விழா, புதுமனை புகுவிழா, கோவில் கொடை விழா உள்ளிட்ட விழாக்களுக்கான அழைப்பிதழ்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுபிரசுரங்கள், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் குறித்த போஸ்டர்கள், பல்வேறு விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்படும் பேனர்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் தயாரிப்பது என பல்வேறு தரப்பினருக்கும் அச்சக தொழில் பெரிதும் துணை புரிகிறது.

இதுதவிர ஆப்செட் பிரிண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங், டிஜிட்டல் பிரிண்டிங் என நவீன எந்திரங்களுடன் மிக துல்லியமான முறையிலும், காண்போர் வியக்கும் வண்ணம் விதவிதமான டிசைன்களிலும் அச்சிடப்படுகிறது.

வறுமையில் வாடும் தொழிலாளர்கள்

விழா காலங்களில் பல்வேறு விதமான டிசைன்களில் அழைப்பிதழ்கள் அச்சிடவும், போஸ்டர்கள், பேனர்கள் அச்சிடவும் அச்சகங்களில் மக்கள் தவம் கிடப்பார்கள்.. அச்சகங்களிலும் இரவு, பகலாக தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்களை அச்சிடும் பணி மும்முரமாக நடைபெறும். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமண விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது. மேலும் வழிபாட்டு தலங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஊரடங்கில் தளர்வு காரணமாக அச்சகங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், போதுமான ஆர்டர்கள் கிடைக்கப் பெறாததால், பெரும்பாலான அச்சகங்கள் செயல்படாததால் அச்சக எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் காட்சிப்பொருளாகவே உள்ளன. இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் வாடுகின்றனர்.

இதுகுறித்து கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த அச்சக உரிமையாளர் யாசிப் கூறியதாவது:-

திருமண விழா

கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. அதில் காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இதுதவிர ஏராளமான பிரிண்டிங் ஆப்செட்கள் உள்ளன. இவற்றை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் திருமண விழா, கோவில் கொடை விழா, கிறிஸ்தவ ஆலய திருவிழா போன்றவை அதிகளவில் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்களை அச்சிடுவது, பைண்டிங் செய்வது போன்ற பணிகளும் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக அச்சிடுவதற்கு தரமான பேப்பர்கள், மை போன்றவற்றை கொள்முதல் செய்து வைத்திருந்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கால், திருமண விழா குறைவான குடும்ப உறுப்பினர்களுடன் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது. மேலும் வழிபாட்டு தலங்களிலும் எந்தவிதமான விழாக்களும் நடைபெறவில்லை. இதனால் இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு அரசு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story