சென்னையில் இருந்து வந்த லாரி டிரைவருக்கு கொரோனா வாய்மேடு-பட்டுக்கோட்டை சாலை மூடல்


சென்னையில் இருந்து வந்த லாரி டிரைவருக்கு கொரோனா வாய்மேடு-பட்டுக்கோட்டை சாலை மூடல்
x
தினத்தந்தி 28 May 2020 5:36 AM IST (Updated: 28 May 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து வாய்மேடு வந்த லாரி டிரைவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வாய்மேடு, 

சென்னையில் இருந்து வாய்மேடு வந்த லாரி டிரைவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய்மேடு-பட்டுக்கோட்டை சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

லாரி டிரைவர்

நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பகுதியை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமைப்படுத்தினர்.

அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலை மூடப்பட்டது

அவருடைய பெற்றோர் மற்றும் மனைவியும் நாகை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல அவருடைய வீட்டிற்கு நெருங்கிய தொடர்பில் இருந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வாய்மேடு- பட்டுகோட்டை சாலை மூடப்பட்டுள்ளது.

சாலையில் 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வேதாரண்யம் தாசில்தார் முருகு, ஊராட்சி தலைவர் மலர், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Next Story