நாகை மாவட்டத்தில் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழி,
நாகை மாவட்டத்தில் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழி
நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்லப்பன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வீரராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய நீர்வள துறையோடு இணைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். தூர்வாரும் பணிகளை ஜூன் 12-ந்தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். மின்சார சட்டம் 2020-ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாய கடன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வேளாங்கண்ணி, திருமருகல்
இதேபோல் வேளாங் கண்ணி அருகே திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்லையன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பால்சாமி, விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ரவி மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர். திருமருகலில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி முன்னிலை வகித்தார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, விவசாய சங்க பொருளாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை
விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இடும்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் மனோன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சேக்இஸ்மாயில், சரவணன், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிக்கல், வேதாரண்யம்
சிக்கலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் வடிவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோல் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார்.
Related Tags :
Next Story