விமான பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்
கோவைக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இ-பாஸ் கொண்டு வராத பயணிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோவை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவைக்கு நேற்று 3-வது நாளாக விமானங்கள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக தற்போது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து கோவைக்கு வரும் விமானங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். விமானத்தில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆகும்.
திருப்பி அனுப்பப்பட்டனர்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆன்லைனில் இ-பாஸ் பெறுவதில் விமான பயணிகளுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று கூறப்படுகிறது. சாலை வழியாக செல்பவர்கள் இ-பாஸ் விண்ணப்பித்தால் தான் பலருக்கு கிடைக்காது. ஆனால் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு விண்ணப்பித்த உடனேயே இ-பாஸ் கிடைத்து விடுகிறது. பயணிகள் விமான டிக்கெட்டுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தால் உடனே கிடைக்கும். ஆனால் இ-பாஸ் இல்லாமல் டெல்லியில் இருந்து வந்த 4 பயணிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இ-பாஸ் என்பது ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ அல்லது மற்றொரு மாநிலத்துக்கோ செல்வதற்கான அனுமதி சீட்டு ஆகும். விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே புக்கிங் ஏஜெண்டுகளே இ-பாஸ் வேண்டும் என்று கூறி விடுவார்கள். எனவே பெரும்பாலான பயணிகள் இ-பாஸ் எடுத்து வந்து விடுவார்கள்.
3 நாட்களுக்கு தான் செல்லுபடியாகும்
மேலும் கோவைக்கு விமானத்தில் வரும் பயணிகளுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அவை பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன. ஆனால் சில பயணிகள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தி அதற்கான சான்றிதழும் கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த சான்றிதழ் 3 நாட்களுக்குத் தான் செல்லுபடியாகும். அதற்குமேலானால் அவர்களுக்கு விமான நிலையத்தில் சளி தொற்று பரிசோதனை நடத்தப்படும். 3 நாட்களுக்குள் பெறப்பட்ட கொரோனா சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி விடுகிறோம். அப்படி அவர்கள் வீடுகளுக்கு சென்றாலும் 14 நாட்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
ஓட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ளும் பயணிகளுக்கு கட்டணம் குறைப்பு
கொரோனா தொற்று காரணமாக ஓட்டல்களை மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் ஓட்டல்களில் யாரும் தங்குவது இல்லை. இந்த நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியுள்ளதால் கோவைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானங்களில் வரும் பயணிகள் அனைவருக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. அந்த பயணிகள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் சளி பரிசோதனை முடிவுகள் வரும் வரை கோவையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தங்குவதற்கு இரண்டு விதமான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
ஒன்று இலவச தனிமைப்படுத்துதல். அதற்கு அவர்கள் சிங்காநல்லூரில் உள்ள பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளில் தங்கிக் கொள்ளலாம்.
மற்றொன்று கட்டணம் தனிமைப்படுத்துதல் முறை. இதை தேர்ந்தெடுக்கும் பயணிகள் ஓட்டல்களில் தங்கிக் கொள்ளலாம். அதற்கு பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும். சளி மாதிரி முடிவு வரும் வரை அவர்கள் ஓட்டலில் தங்கியிருக்கலாம். வெளியே வரக்கூடாது. எனவே அத்தகைய பயணிகளை கவருவதற்காக கோவையில் உள்ள சில ஓட்டல்கள் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளன. ஊரடங்கினால் இத்தனை நாள் மூடப்பட்டிருந்த ஓட்டல்களுக்கு விமான பயணிகள் வருகையினால் வருமானமும் வரத் தொடங்கியுள்ளது என்று கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story