40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கோவாஞ்சேரி வாய்க்கால்: 18 குளங்களில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு


40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கோவாஞ்சேரி வாய்க்கால்: 18 குளங்களில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 28 May 2020 5:49 AM IST (Updated: 28 May 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

கோவாஞ்சேரி வாய்க்கால் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

குத்தாலம், 

கோவாஞ்சேரி வாய்க்கால் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 குளங்களில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவாஞ்சேரி வாய்க்கால்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் அருகே வீரசோழனாற்றிலிருந்து பிரிந்து செல்லும் கோவாஞ்சேரி வாய்க்கால் 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று கடலாழி ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் அப்பகுதியில் உள்ள கோவாஞ்சேரி, ஏரளாச்சேரி ஆகிய 2 கிராமங்களுக்கு பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாகவும் உள்ளது. இந்த வாய்க்கால் 2 கிராமங்களிலும் உள்ள 18 குளங்களுக்கு நீராதாரமாக உள்ளது. இந்த வாய்கால் மூலம் 300 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்து வந்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு

இந்தநிலையில் கோவாஞ்சேரி வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாராததாலும், ஆக்கிரமிப்புகளாலும் 10 அடி அகலமாக இருந்த இந்த வாய்கால் 3 அடியாக குறுகிவிட்டது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 18 குளங்களில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளே தங்களது சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரினர். தற்போது பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து தூர்வாரமுடியவில்லை. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவாஞ்சேரி வாய்க்காலை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர்.

Next Story