வெட்டுக்கிளிகள், கர்நாடகத்திற்குள் வருவதை தடுக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு குமாரசாமி வலியுறுத்தல்


வெட்டுக்கிளிகள், கர்நாடகத்திற்குள் வருவதை தடுக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2020 12:39 AM GMT (Updated: 28 May 2020 12:39 AM GMT)

வெட்டுக்கிளிகள் கர்நாடகத்திற்குள் வருவதை தடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்- மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வட மாநிலங்களில் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள், தற்போது மராட்டிய மாநிலத்திற்குள்ளும் நுழைந்துள்ளது. இது கர்நாடகத்திற்கும் வரும் என்ற ஆதங்கம் விவசாயிகள் மத்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வெட்டுக்கிளிகள் மின்னல் வேகத்தில் பயிர்களை தின்று விடுகிறது. இதனால் வரும் காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படும் இத்தகைய வெட்டுக்கிளிகள், நாடு விட்டு நாடு தாண்டி இந்தியாவுக்குள் வந்துள்ளது. மாவட்டங்களை தாண்டி வருவது என்பது அவற்றுக்கு அவ்வளவு ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது.

முன்எச்சரிக்கை

ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியில் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் மருந்து தெளிக்கும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆலோசனை பெற்று, வெட்டுக்கிளிகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விளைபயிர்களை தின்று விவசாயிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கர்நாடகத்திற்குள் வரக்கூடாது என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story