தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடு: மீட்பு பணிகளுக்காக 42 குழுக்கள் அமைப்பு கலெக்டர் தகவல்


தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடு:  மீட்பு பணிகளுக்காக 42 குழுக்கள் அமைப்பு  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 May 2020 6:29 AM IST (Updated: 28 May 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடாக நீலகிரியில் மீட்பு பணிகளுக்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காகளுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

செல்போன் செயலி

அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பருவமழையின் போது ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக தகவல் அளித்தல், உதவிகள் கோருதல் போன்ற காரணங்களுக்காக பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக NeedD என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செயலியை இணைய இணைப்பின்றி மக்கள் பயன்படுத்தி எதிர்வரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் சரிசெய்யவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், உயிர் மற்றும் உடமை சேதங்களை குறைக்கவும் இயலும்.

கட்டுப்பாட்டு மையங்கள்

இதுதவிர மழையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஊட்டி கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்துக்கு 04262-261295, ஊட்டி வட்டத்துக்கு 0423-2442433, குன்னூர் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423-2508123, கூடலூர் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூர் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதன்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story