நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
ஊட்டி,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை தவிர பிற பகுதிகளில் நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கான்வென்ட் ஆகிய மையங்களுக்கு பிற மாவட்ட பிளஸ்-2 விடைத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.
விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் வகையில் மஞ்சூர், எடக்காடு, கோத்தகிரி, குன்னூர், எருமாடு, பாட்டவயல் ஆகிய 6 பகுதிகளில் இருந்து 7 சிறப்பு பஸ்கள் ஊட்டிக்கு இயக்கப்பட்டன.
கிருமி நாசினி
ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை காண்பித்து பஸ்சில் ஏறியதோடு, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்தனர். விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்க தயாராக வைக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக 45 நாற்காலிகள், மேஜைகள் இடைவெளி விட்டு வரிசையாக போடப்பட்டு இருந்தது. பாடவாரியாக விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக ஆசிரியர்கள் திருத்தும் பணியை சமூக இடைவெளி விட்டு மேற்கொண்டனர். இதனை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் 90 பேர் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கணினியில் பதிவேற்றம்
ஊட்டியில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை குழுவினர் கண்காணித்தனர். முன்னதாக பள்ளி வளாகம், மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளை தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் கூறும்போது, பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 390 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மேஜையில் 12 விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஒரு முதன்மை அதிகாரி தலைமையில் 6 உதவி தேர்வாளர்கள் சரிபார்க்கின்றனர்.
அதன் பின்னர் தேர்வு கண்காணிப்பு அதிகாரியிடம் வழங்கப்படும். இதையடுத்து கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story