கூடலூர் பகுதியில் சூறாவளி காற்று; 2 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் விவசாயிகள் கவலை


கூடலூர் பகுதியில்  சூறாவளி காற்று; 2 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம்  விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 28 May 2020 6:55 AM IST (Updated: 28 May 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் பகலில் நன்கு வெயிலும், இரவில் சூறாவளி காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இதனால் மின்சார வினியோகமும் பாதிக்கப்படுகிறது. கடந்த வாரம் கொளப்பள்ளி பகுதியில் ஏராளமான வாழைகள் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியில் முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் பெரும் ந‌‌ஷ்டம் அடைந்து உள்ளனர். தற்போது கோடை காலமாக இருப்பதால், வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதேபோன்று அதே அளவுக்கு இரவில் சூறாவளி காற்றுடன் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கூடலூர், முதுமலை, மசினகுடி, பந்தலூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் காட்டுத்தீ பரவும் அபாயமும் குறைந்து உள்ளது.

சூறாவளி காற்றுடன் மழை

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் பகுதியில் காலை முதல் மாலை வரை நன்கு வெயில் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி கொரவயல் பகுதியை சேர்ந்த சிவதேவன் என்பவரது தோட்டத்தில் நின்றிருந்த வாழைகள் பாதியில் முறிந்து விழுந்தது. பின்னர் கீச்சலூர் பகுதியை சேர்ந்த சுரே‌‌ஷ், வடவயலை சூரியா உள்பட பல விவசாயிகளின் நிலத்தில் வளர்ந்து இருந்த வாழைகளும் பாதியில் முறிந்து விழுந்தது. இதனால் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.

2 ஆயிரம் வாழைகள் நாசம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விளைந்து சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக நின்றிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் முறிந்து விழுந்தது. இதனால் வாழைத்தார்களை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடியாமல் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. பயிர் காப்பீடு செய்தாலும் சேதத்துக்கு ஏற்ப தொகை கிடைப்பது இல்லை. தற்போது கோடை காலமாக இருந்தாலும் வாழைத்தார்கள் விளைந்து இன்னும் 1 மாதத்தில் அறுவடை செய்ய இருந்தது. ஆனால் கோடை மழை மட்டுமின்றி சூறாவளி காற்றும் வீசுவதால் வாழைகள் காற்றில் முறிந்து விழுந்து விட்டது.

கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வாழைகள் பாதியில் முறிந்து விழுந்து நாசமாகி விட்டது. இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக வாழைகளுக்கு இடையே கயிறுகள் கட்டி பாதுகாக்கப்பட்டது. ஆனால் எப்படி கவனித்து வந்தாலும் காற்று மழையால் வாழைத்தார்கள் போதிய விளைச்சல் இல்லாமல் கீழே விழுந்து விட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு இழப்புக்கான தொகையை அரசிடம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story