குமரி மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


குமரி மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 28 May 2020 7:01 AM IST (Updated: 28 May 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

ஆணழகன் சங்கம்

குமரி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஏராளமானோர் அமெச்சூர் ஆணழகன் சங்க மாவட்ட செயலாளர் சரவணசுப்பையா தலைமையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு கூடங்கள், பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தது. இவ்வாறு மூடப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது அரசு தளர்வுகளை அறிவித்து சிறு, குறு தொழில்களை இயக்க ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் உடற்பயிற்சி கூடங்கள் நடத்திவரும் நாங்களும், எங்கள் பயிற்சியாளர்களும் எவ்வித வருமானமும் இன்றி தவிக்கிறோம்.

செயல்பட நடவடிக்கை

பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்தும் வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகிறது. கட்டிட உரிமையாளர்களுக்கு 2 மாத வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி

இதுதொடர்பாக சரவணசுப்பையா கூறுகையில், சலூன்கள், பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இடைவெளி விட்டு விளையாடக்கூடிய உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும். அதில் அரசு விதிகள் என்ன கூறினாலும் அதனை பின்பற்றி உடற்பயிற்சி கூடங்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

Next Story