பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் முக கவசம் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் தலா 3 மையங்கள் வீதம் மொத்தம் 6 மையங்களில் நேற்று விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 1,396 பேர் ஈடுபட்டனர்.
சிறப்பு பஸ்கள்
முன்னதாக விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள், பணியாளர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 9 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் இருக்கைக்கு ஒருவர் வீதம் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் நுழையும் முன்பு அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரி சோதிக்கப்பட்டது. கைகளை கழுவுவதற்கு கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது. அதே போல் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டு, கட்டாயம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அதில் அமர்ந்து முக கவசம் அணிந்து ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தினர். அடிக்கடி கைகளை கழுவி கொண்டனர். மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குள் மற்றவர்கள் நுழைந்துவிடாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story