பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது சமூக இடைவெளியை கடைபிடித்த ஆசிரியர்கள்
நெல்லை, தென்காசியில் உள்ள மையங்களில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை,
நெல்லை, தென்காசியில் உள்ள மையங்களில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி, 24- ந் தேதி வரை நடைபெற்றது. இந்த விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இக்னேஷியஸ் கான்வென்ட், பெல் மெட்ரிக்குலேசன் பள்ளி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, மகராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. இந்த மையங்களில் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மையம் முழுவதும் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டன.
தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை
காலை 9 மணி முதல் ஆசிரியர்கள் வரத்தொடங்கினர். அவர்களுக்கு நுழைவு வாயிலில் சமூக இடைவெளியுடன் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கை கழுவும் திரவம் மூலம் தங்களது கைகளை சுத்தமாக கழுவி விட்டு மையத்துக்குள் சென்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணிக்காக நெல்லை மாவட்டத்தில் 103 முதன்மை தேர்வு ஆசிரியர்கள், 103 கூர்ந்தாய்வு ஆசிரியர்கள், 619 உதவி தேர்வர்கள் என மொத்தம் 920 பேர் ஈடுபடுகிறார்கள். முன்னதாக முதன்மை தேர்வு ஆசிரியர்கள், கூர்ந்தாய்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. பின்னர் அவர்கள் மாதிரி விடைத்தாள்களை திருத்தினர்.
அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தினர். அதை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அனைத்து மையங்களுக்கும் அடிப்படை வசதி செய்யப்பட்டு இருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் பள்ளி, எம்.கே.வி.கே. பள்ளி, மஞ்சம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தலைமை மையமாக ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் பள்ளி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று மையங்களிலும் மொத்தம் 93 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
முதல்கட்டமாக நேற்று முதன்மை தேர்வு ஆசிரியர்கள் மற்றும் கூர்ந்தாய்வு ஆசிரியர்கள் ஆகியோர் விடைத்தாள்களை திருத்தினர். தலைமை மையத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய விடைத்தாள்களும், எம்.கே.வி.கே. பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணினி அறிவியல் ஆகிய விடைத்தாள்களும், மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் மற்றும் பொருளியல் விடைத்தாள்களும் திருத்தப்படுகின்றன. மொத்தம் நேற்று 194 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். தலைமை முகாம் அலுவலராக சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை இந்த விடைத்தாள்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
இன்று முதல் அதிகமான ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தொடர்ந்து 11-ஆம் வகுப்பு விடைத்தாள்களும் இந்த மையங்களில் திருத்தப்படும். 10-ம் தேர்வு முடிந்த பிறகு அந்த விடைத்தாள்களும் இந்த மையங்கள் தவிர வேறு மையங்களிலும் சேர்த்து திருத்தப்படும். இத்தகவலை இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்பசாமி தெரிவித்தார்.
Related Tags :
Next Story