குடும்ப வன்முறை தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு வாட்ஸ்-அப்பில் பெண்கள் புகார் செய்யலாம் நீதிபதி வஷீத்குமார் தகவல்
குடும்ப வன்முறை தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு வாட்ஸ்-அப்பில் புகார் செய்யலாம் என நீதிபதி வஷீத்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
குடும்ப வன்முறை தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு வாட்ஸ்-அப்பில் புகார் செய்யலாம் என நீதிபதி வஷீத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பணிகள் ஆணைக்குழு
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கிடையே பெருகி வரும் குடும்ப வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் முதியோருக்கு எதிரான செயல்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ள நிலையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு குடும்ப ஆலோசனை வழங்க நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நசீர் அகமது உத்தரவின் பேரில் குடும்ப வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், முதியோருக்கான பிரச்சினைகள், சாலையோரத்தில் உள்ள கைவிடப்பட்ட முதியோர்கள், பெண்கள் குறித்து புகார் கொடுக்க நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் சார்பில் வாட்ஸ்-அப் செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புகார் செய்யலாம்
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் வாட்ஸ்-அப் எண் 94444 56638, ஒருங்கிணைந்த சேவை மையம் (பெண்கள் பாதுகாப்பு) 86673 44764, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 87544 27544, சமூக நல பாதுகாப்பு அலுவலர் 82203 87754, சிறப்பு காவல்துறை அதிகாரிகள் 97909 65297, 94081 94501. இந்த எண்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம்.
புகார் கொடுப்பவர்கள் தங்களுடைய பெயர், வயது, பாலினம் மற்றும் தங்களுக்கு நேர்ந்த குற்றங்கள், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரரின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தகவல்களையும் இதில் பதிவு செய்ய வேண்டும். இந்த புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இலவசமாக ஆன்லைன் மூலமாக குடும்ப ஆலோசனை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story