கொரோனா தடுப்பு நடவடிக்கை: வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்க குழு கலெக்டர் ஷில்பா தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் விமானம் மூலம் வருகை தருபவர்களை கண்காணித்து சோதனை செய்து அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்துக்கு மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் ரெயில் மற்றும் விமானத்தில் வருகை தருபவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களை பல்வேறு இடங்களில் தங்க வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் தங்கும் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சத்தான உணவு மற்றும் சுகாதார வசதி கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
கண்காணிப்பு குழு
மருத்துவ தேவைகளும் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு முகாம்களுக்கும் ஒரு உதவி கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், தன்னார்வலர்கள் இடம்பெறுவார்கள். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். சத்து மாத்திரைகள், நில வேம்பு குடிநீர் ஆகியவற்றை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
முகாம்களில் குடிநீர், மின்சார வசதி, ஜெனரேட்டர் போன்றவைகள் முழுமையாக செயல்படுகிறதா? என்பதையும், சுகாதார வளாகங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குப்பைகளை உடனுக்கு உடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள அனைவருக்கும் எந்தவித குறைபாடும் இல்லாமல் தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, திட்ட இயக்குனர் மந்திராச்சலம், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story