சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்படும் நபர்களுக்கு ஒரே நாளில் கொரோனா பரிசோதனை முடிவு கலெக்டர் தகவல்


சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்படும் நபர்களுக்கு   ஒரே நாளில் கொரோனா பரிசோதனை முடிவு  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 May 2020 8:55 AM IST (Updated: 28 May 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா பரிசோதனை செய்து முடிவு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி, 

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்களிடம் மாதிரிகள் சேகரிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் முறைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தற்போதைய சூழலுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்ட பயணிகள் எவருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள்

தென்பட்டால் அவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இல்லை என்றால் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

வெளிமாநில பயணிகளுக்கு ஆண்டிப்பட்டி, லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. அவர்கள் பரிசோதனை முடிவு தெரியும் வரை சோதனை சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்கி இருக்க வேண்டும். பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஒரே நாளில் முடிவு

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு சோதனை சாவடியில் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடத்தப்படும். பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். 7 நாட்களுக்கு பின்பு மீண்டும் அவர்களிடம் சளி, ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை நடத்தப்படும். அதில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்படும் பயணிகள் தங்கும் நேரத்தை குறைத்திடும் வகையில், அவர்களிடம் இருந்து சேகரிக்கும் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் விரைவாக பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக காலையில் வரும் பயணிகளுக்கு பரிசோதனை முடிவுகள் மாலையிலும், மாலையில் சேகரிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகள் மறுநாள் காலையிலும் விரைவாக பெறப்பட்டு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story