மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு: சென்னை போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வாலிபர் கைது


மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு:  சென்னை போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு  வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 May 2020 4:26 AM GMT (Updated: 28 May 2020 4:26 AM GMT)

மதுரையில் நள்ளிரவில் போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 

மதுரை மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சலீம். அவருடைய மகன் ஷாஜகான்(வயது 22). சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். ரம்ஜான் பண்டிகையையொட்டி இவர் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த 23-ந் தேதி மதுரைக்கு வந்தார்.

அன்றைய தினம் இரவில் ஷாஜகானின் நண்பர்கள் அருண்பாண்டியன், அசாருதீன் ஆகியோரிடம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா, அவருடைய தம்பி பாலமுருகன் ஆகியோர் தகராறு செய்ததாகவும், நண்பர்களுக்கு ஆதரவாக ஷாஜகான் பேசியதாகவும் தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த போலீசார் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

இதற்கிடையில் அண்ணாநகர் போலீசார் கத்தியை காட்டி கொள்ளையடிக்க முயன்றதாக சூர்யா, அவருடைய தம்பி பாலமுருகன், மாமா அன்புச்செல்வம் உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்கள் கைதாவதற்கு போலீஸ்காரர் ஷாஜகான் கொடுத்த புகார் தான் காரணம் என்று அன்புச்செல்வத்தின் நண்பர் வேல்முருகன் (25) நினைத்தார். இது குறித்து அவர் ஷாஜகான் வீட்டிற்கு சென்று தகராறும் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷாஜகான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. உடனே ஷாஜகான் உள்ளிட்டோர் வெளியே வந்து பார்த்த போது அவரது வீட்டின் முன்புள்ள செடி மற்றும் சுவரில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அங்கு தீயை அணைத்தனர். மேலும் அங்கு பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது வீட்டுக்கு வந்து தகராறு செய்த வேல்முருகன்தான் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

மதுரையில் போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story