விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 May 2020 10:35 AM IST (Updated: 28 May 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 327 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 305 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது. இதில் மேலும் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் அருகே உள்ள தொடர்ந்தனூரை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரும், பில்ராம்பட்டை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும், மரகதபுரத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், செஞ்சி அருகே பழவலத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், கணக்கன்குப்பத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் மராட்டியத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைத்து கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில் இதுவரை 308 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுதவிர மராட்டியம், மும்பை போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வந்த 622 பேர் 11 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்எச்சரிக்கை தொடர்பாக 832 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story