2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை
கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.
கடலூர் முதுநகர்,
மத்திய சிறைச்சாலையில் உள்ள 5 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி சென்னை புழல் சிறைக்கு பயிற்சிக்காக சென்றனர். அங்கு பயிற்சி முடிந்ததும், கடந்த 22-ந்தேதி மீண்டும் அவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர்.
சென்னைக்கு சென்று வந்ததால், 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கைதிகளும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர் கைதிகள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. காய்ச்சல் அறிகுறி இருந்த 10 கைதிகள் சிறையிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். மேலும் சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story