மாவட்டத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 May 2020 11:03 AM IST (Updated: 28 May 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சோமையா தலைமை தாங்கினார். இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்தும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உழவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் கையில் கருப்பு கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

அன்னவாசல், அறந்தாங்கி

இதேபோல் அன்னவாசலில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏர்கலப்பை மற்றும் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டு, விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் அறந்தாங்கி ஒன்றியத்தில் ஆறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதேபோல் சுப்பிரமணியபுரம், நாகுடி, அமரசிம்மேந்திரபுரம், பாலகிருஷ்ணாபுரம், மேற்பனைக்காடு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் உழவுத்தொழிலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

கீரமங்கலம், பொன்னமராவதி

கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொன்னமராவதி பகுதியில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பஸ் நிலையத்தில் கட்டுமான தொழிற்சங்க பொறுப்பாளர் சிங்காரம், பஸ் நிலையத்திற்கு வெளியே ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் குமார், திருக்களம்பூரில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சாத்தையா ஆகியோர் தலைமை தாங்கினர். தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு நிவாரணத்தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி, கறம்பக்குடி

ஆலங்குடி வட்ட இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்பு பட்டையணிந்து, கருப்பு கொடியேந்தி வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஊரடங்கு காலத்தில் வீணாகிய விளை பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவிலில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story