விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முகாம்களில் தங்கி இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இம்மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 8 தனிமைப்படுத்தும் முகாம்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 368 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போது முகாம்களில் தங்கி உள்ள அனைவருமே மும்பையில் இருந்து திரும்பியவர்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் 9,054 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் நேற்று முன்தினம் வரை 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்னும் 335 பேருக்கு முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருமே மதுரை, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை முடிந்து 46 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3 பேர்
இந்த நிலையில் விருதுநகர் தனியார் கல்லூரி முகாமில் தங்கி இருந்த மும்பையில் இருந்து திரும்பிய சாத்தூரை சேர்ந்த 62, 65 வயது தம்பதியினர், கமுதியை சேர்ந்த 51 வயது நபர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் 3 பேரும் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முகாம்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story