லாடபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் திடீர் சாவு


லாடபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் திடீர் சாவு
x
தினத்தந்தி 28 May 2020 5:48 AM GMT (Updated: 28 May 2020 5:48 AM GMT)

லாடபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர் திடீரென இறந்தார்.

பெரம்பலூர், 

லாடபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர் திடீரென இறந்தார்.

திடீர் சாவு

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சரண்யா(வயது 32). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். சரண்யா, லாடபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி செவிலியர் பணியில் சேர்ந்தார். மேலும் சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். சரண்யாவிற்கு அடிக்கடி காது வலி ஏற்படுமாம். இதற்காக அவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது காதில் மீண்டும் வலி ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் சரண்யா எழுந்திருக்கவில்லை. அவரை, கணவர் கருப்பசாமி எழுப்ப முயன்றார். அப்போது சரண்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

கொரோனா பரிசோதனை

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த சரண்யாவிற்கு திருமணமாகி 4½ ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளார்.

இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக சரண்யா பணிபுரிந்ததால், அவர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்ததாக தகவல் பரவியது. அதனைத்தொடர்ந்து சுகாதார துறையினர் அவரது உடலில் இருந்து சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

Next Story