பெரம்பலூர், அரியலூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


பெரம்பலூர், அரியலூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 28 May 2020 5:58 AM GMT (Updated: 28 May 2020 5:58 AM GMT)

பெரம்பலூர், அரியலூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

பெரம்பலூர், 

பெரம்பலூர், அரியலூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் சமூக இடைவெளி உள்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு 36,552 பிளஸ்-2 விடைத்தாள்கள் வரப்பெற்றுள்ளது. பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் அந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. முதன்மை தேர்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும், கூர்ந்தாய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஆய்வு

முன்னதாக, விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வந்த ஆசிரியர்கள், கிருமிநாசினி மூலம் கைகளை கழுவவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தலைமையிலும், பெரம்பலூர் கல்வி மாவட்ட அதிகாரி மாரிமீனாள் நேரடி மேற்பார்வையிலும் நடந்தது. மதிப்பெண் சரிபார்ப்பு பணியில் 8 ஆசிரியர்களும், முகாம் பணியாளர் மற்றும் கணிப்பொறி இயக்குபவர்கள் பணியில் 30 ஆசிரியர்களும் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணியை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விடைத்தாள் திருத்தும் பணி காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், உணவு இடைவெளிக்கு பின்னர் மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இளம் செஞ்சிலுவை சங்கம், சாரணர் அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக உதவி புரிந்தனர். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 234 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக அவர்களுக்கு முதன்மை தேர்வாளர்களும், கூர்ந்தாய்வாளர்களும் விடைத்தாள் திருத்துவது குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்திற்கு, 36,012 பிளஸ்-2 விடைத்தாள்கள் வந்துள்ளன. அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Next Story