மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்


மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்
x
தினத்தந்தி 28 May 2020 12:15 PM IST (Updated: 28 May 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே காடுவெட்டி குருவின் மகன் உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மீன்சுருட்டி, 

மீன்சுருட்டி அருகே காடுவெட்டி குருவின் மகன் உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காடுவெட்டி குரு

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குரு. வன்னியர் சங்க தலைவரான இவர், எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது நினைவுநாள் கடந்த 25-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நினைவுநாள் அன்று, அவரது உறவினர்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். குருவின் நினைவுநாளையொட்டி மீன்சுருட்டி பகுதியில் அன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள் காடுவெட்டி கிராமத்தில் உள்ள குருவின் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு குருவின் மகன் கனலரசன் (வயது 20) வீட்டிற்கு, அவரது நண்பரான கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிழக்கு தெருவை சேர்ந்த அருண்குமார் (23) வந்தார். பின்னர் அவர், அன்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை (63) என்கிற சுப்பிரமணியன், அவரது மகன் அய்யப்பன், சின்னப்பிள்ளையின் தம்பி காமராஜ் (58), காமராஜின் மகன் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட கும்பல் அருண்குமாரை வழிமறித்து, அவரது மோட்டார் சைக்கிளை பறித்து வைத்துக்கொண்டு, கனலரசனை அழைத்து வருமாறு கூறி அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

3 பேருக்கு அரிவாள் வெட்டு

உடனே, கனலரசன் வீட்டுக்கு சென்ற அருண்குமார் நடந்த விவரத்தை அவரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து கனலரசன் மற்றும் குருவின் மருமகன் மனோஜ்கிரண் (28), அவரது சகோதரர் மதன்மோகன் (31) ஆகியோர் வீட்டிலிருந்து வெளியே வர, அங்கு வந்த சின்னப்பிள்ளை தரப்பை சேர்ந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனலரசனை வெட்ட பாய்ந்தனர். உடனே, சுதாரித்துக் கொண்ட மனோஜ் கிரண் மற்றும் மதன்மோகன் ஆகியோர் கனலரசன் மீது அரிவாள் வெட்டு விழாமல் இருக்க, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு காப்பாற்றினர். இதனால் மனோஜ்கிரண், மதன்மோகன் ஆகியோருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. கனலரசன் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து சின்னப்பிள்ளை தரப்பை சேர்ந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அரிவாள் வெட்டில் மனோஜ்கிரண், மதன்மோகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். கனலரசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

4 பேர் கைது

படுகாயமடைந்த மனோஜ்கிரண், மதன்மோகன் மற்றும் கனலரசன் ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விசாரணை நடத்தினார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாரிடம் மதன்மோகன் கொடுத்த புகாரின்பேரில், சின்னப்பிள்ளை, காமராஜ், அய்யப்பன், சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னப்பிள்ளை, காமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல, தங்களை தாக்கியதாக சின்னப்பிள்ளை கொடுத்த புகாரின்பேரில், கனலரசன், மதன்மோகன், மனோஜ்கிரண், அருண்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமார், சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story