பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் மக்கள் பீதி காரணம் என்ன? கலெக்டர் விளக்கம்


பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் மக்கள் பீதி  காரணம் என்ன? கலெக்டர் விளக்கம்
x
தினத்தந்தி 29 May 2020 3:31 AM IST (Updated: 29 May 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த வெடிச்சத்தத்துக்கான காரணம் குறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று காலை 10.30 மணி அளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அதிர்வுடன் இந்த சத்தம் கேட்டதால் நிலநடுக்கமாக இருக்கும் என்ற பீதியில் பலர் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். தொழில் நிறுவனங்களில் இருந்தும் பலர் வெளியே வந்தனர். இந்த திடீர் சத்தம் குறித்து எதுவும் தெரியாமல் மக்கள் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டனர்.

இதுபோன்று பொங்கலூர், பல்லடம், இடுவாய், அவினாசிபாளையம், காங்கேயம், தாராபுரம், அவினாசி பகுதிகளிலும் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விட்டதாகவும் தகவல் பரவியது. இந்த பலத்த சத்தத்தை கேட்டு பல விதங்களில் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டடம்

அதேநேரம் குண்டடம், மேட்டுக்கடை, மானூர்பாளையம், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கேட்ட சத்தத்தால் முதலில் அருகில் எங்காவது விவசாய கிணறு தோண்டும் பணிக்காக வெடி வைத்திருப்பார்கள் என எண்ணிய பொதுமக்கள் பின்னர் ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்தவர்களை போனில் தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் சத்தம் கேட்டதா? என விசாரிக்க தொடங்கினர். அனைத்து ஊர்களிலும் சத்தம் கேட்டது என்று கூறினார்கள். ஆனால் என்ன சத்தம்? அது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

இந்த சத்தம் குறித்து திருப்பூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கும் போன் மூலமாக மக்கள் தகவல் கேட்டனர். இதுதொடர்பாக கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

புதிய போர் விமானம்

இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இது தேஜாஸ் போர் விமானத்தின் வேகம் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட சோனிக் பூம் சத்தம் ஆகும். இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்“ என்றார்.

சூலூர் விமான படைத்தளத்தில் தேஜாஸ் ரக போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள்தான் நேற்று பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் விமான படை அதிகாரிகள் கூறும்போது, “தேஜாஸ் ரக போர் விமானத்தின் பயிற்சியால் இந்த சத்தம் ஏற்படவில்லை“ என்றனர்.

இரும்பு கதவு அதிர்ந்தது

இந்த திடீர் சத்தம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்

திருப்பூர் சின்னக்கடை பகுதியை சேர்ந்த செந்தில்குமார்:- நான் பல்லடம் ரோடு சின்னக்கரை பகுதியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது காலை 10.30 மணிக்கு இடி சத்தத்தை விட பயங்கரமான ஒரு சத்தம் கேட்டது. இந்த சத்தம் ஆகாயத்தில் கேட்டது போல இருந்தது. சில நொடி இடைவெளியில் 2 முறை சத்தம் கேட்டது. அப்போது அருகிலுள்ள கடையின் இரும்பு கதவு லேசாக அதிர்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஏதேனும் நில நடுக்கம் வந்து விட்டதோ? என அச்சமடைந்தனர்.

திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ராஜா:- நான் காலை நேரத்தில் கடையில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தேன். அப்போது வெடி வெடித்தது போன்ற பயங்கரமான ஒரு சத்தம் கேட்டது. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் ரோட்டிற்கு ஓடிவந்து சத்தம் எங்கிருந்து வந்தது என தேடினர். ஆனால் அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

Next Story