அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் தஞ்சையில், 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி


அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் தஞ்சையில், 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 May 2020 4:05 AM IST (Updated: 29 May 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் தஞ்சையில், 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பொதுமக்கள் வெப்பம் தணிந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர், 

அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் தஞ்சையில், 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுட்டெரித்த வெயில் மற்றும் புழுக்கத்தால் வெந்து, நொந்த பொதுமக்கள் வெப்பம் தணிந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரும் தவிப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதிலும் கோடை காலம் தொடங்கிய பிறகு வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் உச்சத்தை எட்டியது.

வேறு வழியில்லாமல் பகலில் வெளியில் சென்றவர்கள் குடையை பிடித்துக்கொண்டு சென்று வந்தனர். பெண்கள் தங்கள் ஆடைகளை தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெளியில் சென்று வந்தனர். கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

தூக்கத்தை தொலைத்தனர்

கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர கால கட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதுடன், இரவிலும் ஒரே புழுக்கமாக இருந்தது. இரவு நேரங்களில் புழுக்கம் மற்றும் மின்விசிறியில் இருந்து வெப்பக்காற்று வீசியதால் பொதுமக்கள் வெந்து, நொந்து வந்தனர்.

பல நாட்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து வந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த வெயில் கொடுமைக்கு தீர்வு கிடைக்காதா? என்று ஏங்கி தவித்தனர்.

கொட்டி தீர்த்த கனமழை

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் 1.40 மணி அளவில் தஞ்சை பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிது நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானில் இருந்து மழை துளிகள் வந்து மண்ணை தழுவியது. தூறலாக பெய்த மழை திடீரென பலத்த மழையாக பொழிந்தது.

பலத்த காற்றுடன் பெய்த மழையினால் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்கள் செல்லாமல் இருக்க போலீசார் இரும்பு கம்பிகளால் தடுப்புகளை ஏற்படுத்தினர். அதையும் மீறி சிலர் தேங்கி நின்ற தண்ணீர் வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றனர்.

வெப்பம் தணிந்தது

அப்படி சென்றவர்களில் ஒரு சிலருடைய வாகனங்களின் என்ஜினுக்குள் தண்ணீர் சென்றதால் பாதி வழியிலேயே நின்று விட்டது. பின்னர் அவர்கள் தண்ணீருக்குள் இறங்கி வாகனங்களை தள்ளி கொண்டு சென்றனர். தொடர்ந்து 1½ மணி நேரம் இடைவிடாது பெய்த இந்த மழையின் காரணமாக கோடை வெயிலின் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் தஞ்சை மாநகர மக்கள் அடைந்த மகிழ்ச்கிக்கு அளவே இல்லை என்று சொல்லி விடலாம்.அக்னி நட்சத்திரம் நிறைவடைந்து விட்டதால் இனிமேல் வெயிலின் தாக்கம் குறைந்து தொடர்ந்து கோடை மழை பெய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வருண பகவானை வேண்டி உள்ளனர்.

வல்லம்

வல்லத்தில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழை நீர் நிரம்பி வழிந்தது. பலத்த மழை காரணமாக வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

Next Story