திருப்பூரில் அரசியல் கட்சி சின்னங்களுடன் முககவசம் தயாரிப்பு மும்முரம் ஆர்டர்களின்படி வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு


திருப்பூரில் அரசியல் கட்சி சின்னங்களுடன் முககவசம் தயாரிப்பு மும்முரம் ஆர்டர்களின்படி வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 29 May 2020 4:26 AM IST (Updated: 29 May 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அரசியல் கட்சி சின்னங்களுடன் முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆர்டர்களின் படி வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

திருப்பூர்,

கொரோனா ஊரடங்கின் காரணமாக பல வாரங்கள் பின்னலாடை நிறுவனங்கள் இயங்காமல் இருந்தன. இதன் பின்னர் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிபந்தனைகளுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பு பணி நடந்து வந்து கொண்டிருக்கிறது.

முககவச ஏற்றுமதிக்கு அனுமதி

இதற்கிடையே கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக முககவசங்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக திருப்பூருக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வர தொடங்கியது. ஆனால் வெளிநாடுகளுக்கு முககவச ஏற்றுமதிக்கு தடை இருந்தது. அந்த தடையையும் விலக்கப்பட்டு, ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது திருப்பூரில் ஆடையுடன், முககவச தயாரிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது.

அரசியல் கட்சி சின்னங்கள்

முககவச தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி ஏற்கனவே நடிகர், நடிகைகளின் புகைப்படம் மற்றும் ஸ்பைடர் மேன், அவென்சர்ஸ், பிரபலமான சின்னங்கள், வாய், மீசை, தாடி போன்றவை இருப்பது போன்று முககவசங்களை தயாரித்து வந்தார்கள்.

இப்போது அரசியல் கட்சியினரிடம் ஆர்டர்களை அதிகம் பெறும் வகையில், தொண்டர்களை கவரும் வகையிலும் முககவசங்களில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்களை முககவசங்களில் பிரிண்ட் செய்து, முககவசங்களை தயாரித்து வருகிறார்கள். இதற்கு அரசியல் கட்சியினரிடம் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

வெளிமாவட்டங்களுக்கு...

இது குறித்து முககவச தயாரிப்பாளர் சந்திரகுமார் கூறியதாவது:-

தங்களது கட்சிகளை விளம்பரப்படுத்தும் வகையிலும், தங்களது கட்சி சின்னங்களுடன் முககவசங்களை தயாரித்து தரும்படி ஆர்டர்கள் கேட்கிறார்கள். நாங்களும் அதன்படி தயாரித்து அனுப்பி வருகிறோம். தற்போது சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த முககவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ரூ.12 முதல் ரூ.15 வரை இந்த முககவசங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் முககவசங்களுக்கு அதிகளவு ஆர்டர்கள் வந்துள்ளது. ஆர்டர்களின்படி வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story