இரவில் மக்கள் நடமாட்டம் அதிகம்; பாகூர் பகுதியில் சாலைகள் மீண்டும் சீல் வைப்பு


இரவில் மக்கள் நடமாட்டம் அதிகம்; பாகூர் பகுதியில் சாலைகள் மீண்டும் சீல் வைப்பு
x
தினத்தந்தி 29 May 2020 4:51 AM IST (Updated: 29 May 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் இரவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தடுப்புகள் வைத்து சாலைகள் மீண்டும் சீல் வைக்கப்பட்டன.

பாகூர்,

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி இரவு முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில், பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக வளாகம், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தொழிற்சாலைகள், கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் புதுவை நகரம் மற்றும் கிராமப் புறங்களில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் சாலைகளில் சுற்றி வருவதாகவும், கடைகள் மற்றும் தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் அருணுக்கு புகார் சென்றது. இதனையடுத்து அவர் இரவில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து பாகூர் போலீசார் இருளன்சந்தை, பாகூர், அரங்கனூர், பரிக்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை கட்டுப்படுத்த சாலைகளில் மீண்டும் தடுப்பு ஏற்படுத்தினர். இரவில் பொதுமக்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Next Story